திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி மறுப்பு?.. சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததாக அவர் கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் பதவி ஆசை காரணம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு பதிலளித்த சி.வி. சண்முகம், “அரசியலில் இருப்பவர்கள் பதவிக்கு வர நினைப்பது தவறில்லை” என்று நேரடியாகக் கூறினார்.

மேலும், “சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது கொறடா உத்தரவை மீறியது என்று இபிஎஸ் கூறுவது சட்டரீதியாக சரியல்ல” என்றும் அவர் தெரிவித்தார். பொதுச்செயலாளர் நேரடியாக கொறடாவை நியமிக்க முடியாது, சட்டமன்றக் குழு கூட்டம் நடத்தி எம்.எல்.ஏக்களே தலைவரையும் கொறடாவையும் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

அதிமுக சட்டமன்றக் குழுக் கூட்டமே முறையாக நடைபெறவில்லை என்றும், எம்.எல்.ஏக்கள் கூட்டம் எப்போது நடந்தது என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “27 உறுப்பினர்களின் கையெழுத்துடன் நாங்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால் இபிஎஸ் அளித்த கடிதம் போலியானது. வேறு காரணத்திற்காக பெறப்பட்ட கையெழுத்துகளை அவர் பயன்படுத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது அமைச்சர் பதவிக்காக என கூறப்படுவது குறித்து பதிலளித்த அவர், “அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் பதவிக்கு வரவே விரும்புவார்கள். அதில் தவறு எதுவும் இல்லை” என்றார்.

அதே நேரத்தில், “திருமாவளவனை முதல்வராக ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்தார். நான்தான் முதல்வராக இருப்பேன் என்று கூறினார்” என்ற அவரது குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் எந்த வித பிளவும் இல்லை என்றும், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் மட்டுமே இருப்பதாகவும் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்தார்.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/