எஸ்.பி. வேலுமணி ஊழல் ரூ.600 பல்புக்கு ரூ.4500; ரூ.500 கோடி கொள்ளை
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் முறைகேடு செய்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்பது புகார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் முறைகேடு மூலம் ஒரு எல்இடி பல்புக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ3,500 கொடுத்து இழப்பை சந்தித்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில்தான் இன்று எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
மின் தேவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார். 110 விதியின் படி திட்டத்தை குறித்து விவாதிக்க கூடாது என்பதால் இந்த அறிவிப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உருவானது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரு விளக்குகளை எல்.இடி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தை தனிக்குழு அமைத்து செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் 8 லட்சம் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்ற 300 கோடி ரூபாய் நிதியை அப்போதைய தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் 2016 முதல் 2018 ஆண்டு வரை தெரு விளக்குள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்ற மொத்தமாக 875 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. எல்.இ.டி பல்புகளுக்கான கொள்முதல் விலையை அப்போது இருந்த சந்தை விலையை விட அதிகமாக நிர்ணயித்து திட்டம் செயல்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது 600 ரூபாய்க்கு விற்பனையாகும் பல்புகளை 4500 ருபாய்க்கு கொள்முதல் செய்து தமிழக அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது தகுதியான நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பல்புகளை விற்பனை செய்ய முன்வந்தும் கூட அவற்றை புறம் தள்ளி தகுதியற்ற தனக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு எல்இடி பல்புகள் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எஸ்.பி வேலுமணி உத்தரவின் பேரில் அதிகாரிகள் வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த திட்டத்துக்கு எல்இடி விளக்குகளை வழங்கியவர்கள் மின்சார துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாதவர்கள் என்றும் டெண்டர் எடுத்தவர்கள் எல்லோரும் எஸ்.பி. வேலுமணியின் பினாமிகள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது எஸ்.பி.வேலுமணி வீடுகள், நிறுவனங்களில் நடைபெறும் 3-வது சோதனையாகும். இதற்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, டெண்டர் முறைகேடு வழக்கு ஆகியவற்றிலும் எஸ்.பி.வேலுமணி மற்றும் பினாமிகளின் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி ஊழல் முறைகேட்டில் எஸ்பி வேலுமணி ஈடுபட்டார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் முந்தைய வழக்கு. இது தொடர்பான சோதனைகளில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, ரூ.84 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்போது கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்த ஆவணங்களும் சிக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.