வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தொகுதி மாறியவர்கள் அலைக்கழிப்பு – படிவ விநியோகம் குறித்த பெரும் புகார்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், தொகுதி மாறியவர்கள் படிவம் பெறுவதில் கடும் சிரமம் அனுபவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. நகரின் 16 சட்டப்போர்வைத் தொகுதிகளில் மொத்தம் 40.15 லட்சம் வாக்காளர்களுக்கு தலா இரண்டு படிவங்கள் கடந்த 4ஆம் தேதி முதல் 3,178 பணியாளர்களால் விநியோகிக்கப்பட்டன.

இரண்டு வாரங்களாக வீடு தேடி சென்று விநியோகித்த படிவங்களில் 75 சதவீதம் மட்டுமே வாக்காளர்களிடம் சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெரு, வார்டு, தொகுதி மாற்றங்களை கைப்பேசி மூலம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தொகுதி மாறிய பலருக்கு கணக்கீட்டுப் படிவமே வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குச்சாவடி அலுவலர்களைத் தேடி பெற வேண்டிய நிலை காரணமாக, படிவத்தை நிரப்பி மீண்டும் ஒப்படைக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு வார்டிலும் சுமார் 300 பேர் வரைவு பட்டியலில் இடம்பெறாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்.

வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பின், புதிய முகவரி ஆவணங்களுடன் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொகுதி மாறியவர்கள் பெரும் சிரமத்தில்: மக்கள் பிரதிநிதிகளின் கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கே.நகர் 42-வது வார்டு உறுப்பினர் எம். ரேணுகா கூறுகையில்,
“தொகுதி மாறியவர்கள் படிவம் பெற அலைய வேண்டிய நிலை உள்ளது. இணையதள செயல்பாடும் மிகவும் மந்தமாக உள்ளது,” என்றார்.

வடசென்னை தெற்கு–வடக்கு அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ராஜேஷ்,
“தொகுதி மாறியவர்கள் புதிய தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட வேண்டும். அதுதான் நடைமுறை,” என்று விளக்கினார்.

அரசியல் தலையீடு? அதிமுக குற்றச்சாட்டு

அதிமுக தரப்பு கூறுகையில்,
தொகுதி மாறிச் சென்ற திமுகவினரை பழைய தொகுதியிலேயே வாக்காளர் பட்டியலில் சேர்க்க அதிகாரிகளின் உதவியுடன் திமுகவினர் முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த தலையீட்டின் காரணமாக படிவங்களை கணினியில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது 20% படிவங்களே பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் விளக்கம் – சிறப்பு முகாம் மீண்டும்

இந்த பிரச்னை குறித்து கேட்டபோது, தேர்தல் அதிகாரிகள்,
“உரிய ஆவணங்களுடன் படிவம் சமர்ப்பித்தவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படும். அப்போது பிரச்னைகள் தீரும்,” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தைப் பற்றிய அனைத்துக் கட்சி கூட்டம் நவம்பர் 24-ஆம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ளது.



https://newstamil.in/