பெரியார் பற்றி கட்டுரை; சோ மன்னிப்பு கேட்டார் – சுப.வீரபாண்டியன் ரஜினிக்கு அறிவுரை

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது உண்மையா, இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்த ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து ரஜினிக்கு தெளிவான விளக்கம் ஒன்று கொடுத்து உள்ளார் சுப.வீரபாண்டியன் – “நடிகர் ரஜினிகாந்த் உண்மையைத் திரித்துப் பேசி வருகிறார். சேலத்தில், கடந்த 1971 ஜனவரியில் ஈ.வெ.ராமசாமி நடத்தியது ‘மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு.’ மாநாட்டிற்கு எதிராக, கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்த, ‘ஜன சங்கம்’ அனுமதி கேட்டதற்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியிருந்தார்.

ஆனால், அதைத் திரித்து, அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரவில்லை எனக் கூறுகிறார்கள். அனுமதியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர், செருப்பை எடுத்து, ஈ.வெ.ரா., மீது வீசினார். அது, அவர் மீது விழாமல், பின்னால் வந்த வண்டியின் மீது விழுந்தது. அந்த வண்டியில், வால்மீகி எழுதிய காப்பியத்தில் வரும் ராமர், சீதை சித்திர படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தச் செருப்பை எடுத்த, ஈ.வெ.ரா., தொண்டர்கள், ராமர் படத்தின் மீது அடித்தனர். ரஜினி சொல்வது போல அங்கு, ராமர் சீதையின் சிலைகள் ஏதும் இல்லை; அவை நிர்வாண கோலத்தில் இருந்தது என்பதும் பொய்.

ஈ.வெ.ரா., ராமர் சித்திரத்தை செருப்பால் அடித்தார் எனக் கூறி, ஜன சாங்கம், சேலம் நீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடுத்தது. விசாரணையில், ‘துக்ளக்கில் தவறான தகவல் வெளியாகிவிட்டது’ என, நீதிமன்றத்தில் சோ வாக்குமூலம் அளித்தார். நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இப்படி அப்போதே திரிக்கப்பட்ட செய்தி என முடிவானதை, ரஜினிக்கு யாரோ மீண்டும் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதை அவர் ஆராயாமல் அப்படியே பேசியிருக்கிறார். புகழ் பெற்ற, பொது வாழ்விற்கு வர துடிக்கும் ஒருவர், யாரோ சொல்வதை தீர விசாரிக்காமல் பொறுப்பின்றி பேசியிருக்கிறார். பொது வாழ்விற்கு வருகிற போது, எதிலும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் இது நமக்கு உதவாது என, விலகிச் செல்ல வேண்டும்.

துக்ளக் விழாவில், எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அந்த இதழை பாராட்டிப் பேசியிருக்கலாம். ஆனால், ‘முரசொலி’ குறித்து அவர் ஒப்பிட்டுப் பேசியிருக்கத் தேவை இல்லை. ‘முரசொலி’ விழாவிற்கு வந்திருந்த ரஜினி, மேடை ஏறிப் பேசவில்லை. ரஜினி எதையும் அறிந்துகொள்ளாமல் திடீர் திடீர் எனப் பேசி வருகிறார்.

ரஜினி உண்மைக்கு மாறாகப் போசுவதால், பொதுவாழ்விற்கு வரும் முன்னரே, அவர் பெயரை அவரே கெடுத்துக் கொள்கிறார். அவர் பேசியதில் உண்மை இருந்தால், அதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும்.

அல்லது நான் தவறாகப் பேசிவிட்டேன் என, வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல், எதையாவது சொல்லிவிட்டு ‘சைலன்ட் மோட்’ போய்விடுகிறார். இது, எந்த விதத்திலும் நியாயமும் இல்லை; போர்க் குணம் உடையதாகவும் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.



Comments are closed.

https://newstamil.in/