ஒரு நிமிடத்தில் 95 ஆர்டர்கள்; பிரியாணிக்கு அடிமையான இந்தியர்கள்!
2019ஆம் ஆண்டில் ஸ்விக்கியிலிருந்து நிமிடத்திற்கு சராசரியாக 95 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியர்கள் ஆன்லைனில் விரும்பி ஆர்டர் செய்த உணவுகள் குறித்த ஸ்வாரஸ்யமான பல தகவல்களையும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான SWIGGY தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில் சாப்பாடு என்றாலே பிரியாணி எனும் அளவுக்கு பிரியாணி பிரியர்கள் அதிகமாகி விட்டனர். அந்த வகையில் நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியிலிருந்து ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 95 பிரியாணிகளை இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டிருப்பதாக அந்நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக 1 நொடிக்கு சுமார் 2 பிரியாணிகளை இந்தியர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.
ஸ்விக்கியில் புதிய பயனர்களின் மிகவும் பொதுவான முதல் ஆர்டராக பிரியாணி உள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நான்காவது ஆண்டு தகவல்’ அறிக்கையின்படி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் முதலிடத்தில் பிரியாணி உள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டும் சைவப்பிரியர்கள் கிச்சடியை அதிகம் விரும்பி உள்ளனர். அதனாலேயே, இந்த ஆண்டு கிச்சடிக்கான ஆர்டர்கள் சுமார் 128 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக வெஜ் pizza-க்களை இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட உணவுகளாக, மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் மற்றும் தால் மக்னி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஸ்விக்கியில் தற்போது 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவு டெலிவரி செய்கின்றனர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பெண்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் ஸ்விக்கி டெலிவரி வசதி உள்ளது.
Comments are closed.