கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி! எப்போது கிடைக்கும்?
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 வைரஸ்க்கான தடுப்பு மருந்து கண்டறிய உலகளவில் சுமார் 100 மருந்துகள் சோதனை அளவில் உள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து, சோதனை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது.
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பு மருந்தின் உரிமமானது, AstraZeneca என்னும் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துதான் கொரோனா தடுப்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சிகளில் முதன்மையானது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது.
இந்த தடுப்பு மருந்துக்கு, ChAdOx1 nCoV-19 சாடாக்ஸ் ஒன் நோவல் கொரோனா வைரஸ் 19 என பெயரிடப்பட்டுள்ளது. 1077 பேரின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனையில், இந்த மருந்து நல்ல பலன் கொடுத்திருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையானது, 3-ம் நிலை மனித பரிசோதனையில் உள்ள நிலையில், முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி லான்சட்’ மருத்துவ இந்த பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரிசோதனையில், மனிதர்களிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பு மருந்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸை வீழ்த்தக் கூடிய வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருத்து அதிகரித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பை உண்டாக்கினாலும், வைரஸை வீழ்த்தக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதால், வைரஸ் செயலிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சத்தில் இருந்து விடுதலையே கிடைக்காதா? என்ற நிலையில் இருந்தவர்களுக்கு இந்த செய்தி ஆறுதலை அளித்துள்ளது. இந்த மருந்து எப்போது கிடைக்கும் என்பது பற்றி பிபிசி தளம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, தடுப்பு மருந்து பொதுவெளியில் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments are closed.