இளையராஜா புகைப்படம் & பெயரை யூடியூப், பேஸ்புக் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம், பெயர் மற்றும் அவரை அடையாளப்படுத்தும் தகவல்களை சமூகவலைத்தளங்களில் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தனது புகைப்படம் மற்றும் பெயர் அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,

  • தன்னை குறிக்கும் புகைப்படம், பெயர், “இசைஞானி” போன்ற பட்டப்பெயர்,
  • குரல் அல்லது அவரைப் போல உருவாக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள்

எதையும் அவரின் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்கவும், அனுமதியின்றி பயன்படுத்தி பெற்ற வருமான விவரங்களை சமர்ப்பிக்கவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி போன்ற இசை நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் AI தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டு (மார்ஃபிங்), வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்தப்படுவதாக விளக்கினர்.

நீதிபதி, “புகைப்படம் அல்லது பெயரை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு?” என கேள்வி எழுப்பியபோது, மனுதாரர் தரப்பு, “இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படம் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருவாய் ஈட்டப்படுவது அவரது தனிப்பட்ட உரிமைக்கு நேரான மீறல். மேலும், ரீல்ஸ், மீம்ஸ் போன்றவற்றில் அவதூறான உள்ளடக்கங்களும் பதிவிடப்படுகின்றன” என பதிலளித்தது.

வாதங்களை கேட்ட நீதிபதி, சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்துவது மீது இடைக்கால தடை விதித்தார். அதனுடன், யூடியூப் உள்ளிட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியும், விசாரணையை ஒத்திவைத்தார்.



https://newstamil.in/