Thursday, September 10, 2026
LatestNEWS

“திமுக ஆட்சியில் 10% கமிஷன்?” அமலாக்கத்துறை கடிதத்தை காட்டி விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஒப்பந்தப் பணிகளில் 7.5 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெறப்பட்டதாகவும், இதற்கு ஆதாரமாக தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியதாகவும் விஜய் தெரிவித்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறையில் “Party Fund” என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாகப் பயனடைந்ததாகக் குற்றம்சாட்டினார்.

டாஸ்மாக் பார் விவகாரத்தில் “கரூர் கேங்” மற்றும் ரத்தீஷ் என்பவர் குறித்து விஜய் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதிகாரிகள் சிலர் அவருடைய கட்டுப்பாட்டில் செயல்பட்டதாகவும், பார் உரிமையாளர்களிடம் “Party Fund” என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் பெயர்கள் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியுள்ளதாகவும் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒரு “Organised Crime Syndicate” போன்று செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது, வழக்கை விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியதாக அர்த்தமல்ல என்றும் விஜய் தெரிவித்தார். தற்போது இரண்டு துறைகள் தொடர்பான கோப்புகளை மட்டுமே திறந்துள்ளதாகவும், மீதமுள்ள கோப்புகளையும் திறந்தால் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

இதனுடன், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வீராணம் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தகவல்களையும் விஜய் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் ஒப்பந்தம் மற்றும் கமிஷன் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

“ஊழல் என்று சொன்னால் ஆதாரம் இருக்கிறதா என்றுதான் திமுகவினர் கேட்கிறார்கள்; ஊழல் செய்யவே இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை” என விஜய் விமர்சித்தார்.

பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் பேச்சுகள் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறிய விஜய், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் குறுக்கிடுவது பொறுப்பான செயலாக இருக்காது என்றும், மக்களுக்காக பேச வேண்டிய விஷயங்களை தான் இதயத்திலிருந்து தயாரித்து பேசுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் உருவானவை அல்ல என்றும், முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.

தவெக ஆட்சியில் காவல்துறையில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருக்காது என்றும், போதைப்பொருள் புழக்கம் என்ற பிரச்சினையை 100 நாட்களில் முழுமையாக ஒழித்துவிட முடியாது என்றும் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.