Thursday, September 10, 2026
LatestNEWS

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைமையிலான கூட்டணி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ தனது வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகம் (தனி) தொகுதியிலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் பி. சத்தியபாமா தாராபுரம் (தனி) தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

இருவரும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்த இருவரும் தவெகவில் இணைந்தனர். தற்போது அதே தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணி சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தவெக தலைமையில் புதிய கூட்டணி

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் தவெக கூட்டணி வேட்பாளர்களின் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.