Thursday, September 10, 2026
LatestNEWS

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் இன்று (ஆகஸ்ட் 4) போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர், “ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் கடந்துவிட்டது. தற்போது ஆகஸ்ட் மாதமாகியும் இன்னும் ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி முதலமைச்சர் பேசுவதில்லை. அவருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான். எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ‘தண்ணீர்’ வர வேண்டும். நான் காவிரியைச் சொன்னேன்,” என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சென்னை உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

இந்த தகவலைத் தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உதயநிதியின் இல்லத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உதயநிதிக்காக வந்த வழக்கறிஞர்களும் போலீசாரால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், வீட்டுக்குள் சென்ற போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதாக தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு ஏற்று விசாரணைக்கு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, நீதிபதி இளந்திரையன் முன்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிற்பகலில் விசாரணை நடைபெறும் வரை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது.

கைது செய்யப்பட்ட உதயநிதி

எனினும், அந்த நேரத்தில் உதயநிதியின் இல்லத்துக்குள் இருந்த போலீசார், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.

உதயநிதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தை திமுகவினர் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.