தொழிற்சங்கங்கள் ‘பந்த்’; வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கும்!
மத்திய அரசை கண்டித்து 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
போராட்டத்தில் ஈடுபடுவதால் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், தமிழகத்தில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. பணம் பட்டுவாடா, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த பாதிப்பு குறித்து பங்குச்சந்தைகளுக்கு பெரும்பாலான வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. அதே சமயத்தில், தனியார் வங்கிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் செயல்படும்.
பா.ஜ.க. தவிர்த்து அனைத்து கட்சிகளும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பல இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற உள்ளது. வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறுகிறது.
தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு இன்று எந்த வித விடுப்பும் அளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
Comments are closed.