தங்கமணி த.வெ.க.வில் இணைவாரா? செங்கோட்டையன் நீக்கத்துக்குப் பிறகு அதிமுகவில் பரபரப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் சேர்ந்ததன் பின்னர் அதிமுகவிலுள்ள அதிருப்தி தலைவர்களை வெற்றிக் கழகத்தில் இணைய வைக்க அவர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான தங்கமணி பொதுக்குழு தீர்மான குழுவில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததோடு, எம்ஜிஆர் – ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராகவும் செயல்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதற்கும் அவர் காரணங்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்தார். ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தியதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அதிமுகக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன் இரண்டு முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த இருவரில் ஒருவராக தங்கமணி இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால், திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் தங்கமணி கலந்து கொண்டதால், இந்த வதந்தி தணிந்ததாக அதிமுகவினர் கூறினர். இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தீர்மானங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருவதால், தங்கமணி இணைவு குறித்து மீண்டும் அரசியல் சூடுபிடித்துள்ளது.



https://newstamil.in/