இது வெறும் ட்ரைலர் – அக்டோபர் 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது – புயலாக வலுவடைய வாய்ப்பு!
தமிழகத்தில் மழை நிலவரம் மேலும் தீவிரமாகும் நிலையில், பிரபல வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரின் எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) முதல் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் (அக்டோபர் 23 வரை) வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதற்கடுத்து, வரும் அக்டோபர் 25 அல்லது 26 ஆம் தேதியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், அது படிப்படியாக வலுவடைந்து சுழல் புயலாக (Cyclone) மாறக்கூடும் எனவும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் உருவாகும் இந்த புயல் தென் இந்திய மாநிலங்களுக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (அக்டோபர் 21) தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் — நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை — உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் வானிலை திடீர் மாறுபாடு ஏற்பட்டு மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
பிரதீப் ஜான் பதிவு முடிவில், “இது டிரைலர்தான்… உண்மையான நிகழ்ச்சி இன்னும் வரப் போகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.