அரசியலில் குதிக்கும் நடிகை மீனா; தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில பொறுப்பு!
நடிகை மீனா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை தான் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை மீனா பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே மீனா பாஜக கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மீனா பதிவு வெளியிட்டிருப்பதாக பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
திடீரென டெல்லிக்கு மீனா சென்றிருக்கிறார் அங்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து இருக்கிறார். அவரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மீனா பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், “மாண்புமிகு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, உங்களை சந்தித்தது ஒரு மரியாதை. ஐயா உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கண்டேன். அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி” என்று அந்த பதிவில் மீனா குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் மீனாவுக்கு பாஜகவில் மாநில பொறுப்பு வழங்க உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது, இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில், கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல், நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, மாநில நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஒப்புதல் பெறப்பட்டதாகவும், மேலும், சில தமிழ்நாடு அரசியல் கட்சிகளை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. தனது டெல்லி பயணம் குறித்து நயினார் நாகேந்திரன் நாளை செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது.