தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. “எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரை விமர்சிக்கும் வகையில் ஆ.ராசா பேசியதாக வெளியான கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜயின் சட்டப்பேரவை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆ.ராசா பங்கேற்று பேசினார்.
ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை
சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது நிர்மல் குமாரின் குடும்பப் பின்னணியை குறிப்பிட்டு ஆ.ராசா பேசியதாக கூறப்படும் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என்ற வார்த்தை பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” – தலைவர்கள் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதாகவும், அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் நிர்மல் குமார் பேசிய கருத்துகளை திமுக விமர்சிக்கலாம்; ஆனால் அவரது தாயாரை இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வலியுறுத்தல்
பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும், சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை அவர்களை கண்டித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையை நினைவுபடுத்திய அவர், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்.. கூட்டணிக்குள்ளும் அதிருப்தி?
ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களை இழிவுபடுத்தும் எந்தவொரு கருத்தும் அரசியல் விமர்சனத்தின் எல்லைக்குள் வராது என்றும், தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களை அரசியல் விவாதத்திற்குள் கொண்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பின்னணி என்ன?
முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் மிசா கால கைது மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பான விவகாரங்களைப் பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதிலளித்திருந்தார்.
அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
“வார்த்தையைத் திரும்பப் பெற தயக்கம் இல்லை” – ஆ.ராசா
இந்த நிலையில், தனது பேச்சு தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், “வார்த்தையைத் திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை” என்று ஆ.ராசா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் சர்ச்சைக்குரிய கருத்தை அவர் திரும்பப் பெறுவாரா? அல்லது திமுக தலைமை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கும்? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
அரசியல் விமர்சனமா? தனிப்பட்ட தாக்குதலா?
அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் அரசியல் விவாதத்தின் தரத்தை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஆ.ராசாவின் பேச்சு தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக தலைமை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதே அடுத்த கட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.