Sunday, September 13, 2026
ENTERTAINMENT

“ஆட்சி சரியில்லை” விஜய் பற்றி விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை? கடுப்பான விஜய் ரசிகர்கள் – Bigg Boss Tamil 10

லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் விஜயை மறைமுகமாக விமர்சித்ததாக விஜய் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் நேற்றைய சனிக்கிழமை எபிசோடில், கடந்த வாரம் தலைவராக இருந்த சாதிகாவிடம் விஜய் சேதுபதி லீடர்ஷிப் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அப்போது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரச்சனை வந்தவுடன் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி பேசிய இந்த கருத்துகள் அடங்கிய ப்ரோமோ வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, “இது விஜயை குறிவைத்து பேசப்பட்டதா?” என்ற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பத் தொடங்கினர்.

அதன்பிறகு ஒளிபரப்பான எபிசோடிலும், சாதிகா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா என்றும், அவை நிறைவேறாமல் போனதற்கான காரணம் என்ன என்றும் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். மேலும், எந்தவொரு பிரச்சனை வந்தாலும் அந்த நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும், பிரச்சனை ஏற்பட்டவுடன் அதிலிருந்து விலகிச் செல்லக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, “விஜய் சேதுபதியின் பேச்சு விஜயை குறிவைத்ததுதானா?” என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது. சில ரசிகர்கள், விஜய் சேதுபதி இதற்கு முன்பும் விஜய் தொடர்பாக கிண்டலாக பேசிய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விடிவி கணேஷிடம் விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை வைத்து சிலர் விஜய் சேதுபதி தொடர்ந்து விஜயை விமர்சித்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததையும் ரசிகர்கள் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இருதரப்பினருக்கும் இடையே விவாதம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இன்றைய பிக் பாஸ் எபிசோடில் விஜய் சேதுபதி இந்த விவகாரம் குறித்து ஏதாவது விளக்கம் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவர் தனது வழக்கமான பாணியில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா அல்லது இந்த விவகாரம் அப்படியே கடந்து செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.