கள்ளக்காதல் மற்றும் ஐ.டி. பணியாளர்கள் தற்கொலை முயற்சி அதிகரிப்பு! – அதிர்ச்சி தகவல்

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மை பிரச்சனை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகின்றனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 33 ஆயிரம் பேர் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளதாகவும், ஐடி பணியாளர்கள் மற்றும் தவறான தொடர்பு வைத்திருப்போர் அதிகமாக தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில் தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் உயிரை முடித்துக் கொள்ள விஷம் அருந்தியவர்கள், தூக்கிட்டு கொண்டவர்கள் முதல் இடத்தையும், கடுமையான மன உளைச்சல், பணி நெருக்கடியால் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும், கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை காரணமாகவும் அதிக அளவில் தற்கொலை முடிவை தேடிச்செல்வது கண்டறியப்பட்டது.

எந்த ஒரு பிரச்சனையையும் கண்டு பயந்து நடுங்கி தன்னால் முடியாது என்று அச்சம் கொள்பவர்கள் மட்டுமே தற்கொலை முடிவை தேடிச்செல்வார்கள் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்கள், எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டும் மன உறுதியாக இருந்தால் போதும் அத்தனை தடைகளையும் முயற்சியினால் தகர்த்து சாதிக்கலாம் என்கின்றனர்.

இதுவரை 70 சதவீதம் பேரை தற்கொலை எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளதாகவும் ஆலோசனை வேண்டுவோர் 104 ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தனர்.



Comments are closed.

https://newstamil.in/