நீதிபதியை ‘பாஸ்’ என்று அழைத்த விஷால்; கோபமான நீதிபதி!
சென்னை: லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்ததால், அதிருப்தியடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும் என்றும், மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஷால், தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.
இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் எல்லா படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடிகர் விஷால் நேற்று நேரில் ஆஜரானார்… அப்போது லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தபோது, “இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. என்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்” என்றார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதி, “நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? ரொம்ப புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் கிடையாது.. கவனமாக பதில் சொல்லுங்க.. சண்டக்கோழி 2 படத்தை வெளியிடும் முன்பாக பணத்தை 10 நாட்களுக்கு முன்பாகவே திருப்பித்தந்து விடுவதாக சொன்னீங்களா?” என்று கேட்டார்.
அதற்கு விஷால், நீதிபதியை “பாஸ்” என அழைத்தார்… இதைக்கேட்டதும் மேலும் கொதிப்படைந்து குறுக்கிட்ட நீதிபதி, “இதுபோல பாஸ் என்று எல்லாம் இங்கு சொல்லக்கூடாது… கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்க வேண்டும்.. லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியுள்ளீர்களா? என்று கேட்டார். உடனே விஷால், “ஆம்.. லைகாவால் தான் அந்த கடனை வாங்க நேரிட்டது” என்றார்.. எனினும் குறுக்கு விசாரணை முடிவடையாததால், இன்று அதாவது வெள்ளிக்கிழமை 2ம் தேதிக்கு விசாரரணையை தள்ளி வைத்தார் நீதிபதி.. அத்துடன் இன்றும் விஷாலை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.