‘முரசொலி’ பஞ்சமி நிலம் மூலப்பத்திரம்; திமுக தாக்கல்

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் மீது தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தார்.

‘முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல’ என்பதற்கான, மூலப்பத்திரத்தை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அசுரன் படம் வெளியானது. இப்படத்தை பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘டுவிட்டர்’ பதிவில், ‘பஞ்சமி நிலம் குறித்து பேசும், அசுரன் படம் அல்ல; பாடம்’ என, கருத்து தெரிவித்து இருந்தார். அதை விமர்சித்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ‘சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது’ என, குற்றம் சாட்டினார். இதே கருத்தை, தமிழக பா.ஜ., நிர்வாகி சீனிவாசனும் கூறினார்.இவர்கள் மீது, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு, எழும்பூர், 14வது நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி, ‘முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளேன். முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல’ என, பிரமாண வாக்குமூலம் அளித்தார். மேலும், அந்த நிலத்திற்கான மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை, ஜன., 24க்கு தள்ளி வைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், இருவரும் கவுரவம் பார்க்காமல், தவறுக்கு மன்னிப்பு கோரினால் திமுக தலைவர் ஸ்டாலின்அனுமதியோடு வழக்கை வாபஸ் பெறுவேன் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/