18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வந்தடைந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வந்துள்ளதால், அவரது இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குநருமான காய் கி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையம் வந்த ஜி ஜின்பிங்கிற்கு இந்திய பாரம்பரிய கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு ஜி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பயணம்
ஜி ஜின்பிங் ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றிருந்தார்.
அதற்கு முன்பு, 2016-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் இந்திய பயணத்தின்போதும் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.
இந்தியா-சீனா உறவில் முக்கிய திருப்பம்?
2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையிலான உறவில் நீண்ட காலமாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. தற்போது இரு நாடுகளும் அந்தப் பதற்றத்தைத் தணித்து, இருதரப்பு உறவுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஜி ஜின்பிங்கின் இந்திய பயணத்துக்கு முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் பெய்ஜிங்கில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
மேலும், ஆகஸ்ட் 25-ம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற 25-வது சுற்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் சீனா இடையே 8 அம்ச ஒருமித்த முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எல்லை வரையறை மற்றும் எல்லை நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இதனால், பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி நடைபெறும் மோடி – ஜின்பிங் சந்திப்பு, இந்தியா-சீனா உறவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-சீனா உறவை நீண்டகால மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கையாளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அதிகரித்து ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்திருந்தார்.