வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2026
ENTERTAINMENT

Sardar 2 Movie Review: இலக்கை எட்டியதா உளவாளியின் பயணம்?

Sardar 2 Movie போஸ்டர்

Sardar 2 Movie

2026 • தமிழ் சினிமா விமர்சனம்
சான்றிதழ்: U/A நேரம்: 2 மணி 15 நிமிடம் | U/A வகை: சினிமா / பொழுதுபோக்கு (Commercial Drama)
மதிப்பீடு (Rating)
3.0 / 5
★★★★★
நல்ல பொழுதுபோக்கு (Good Entertainer)
🎭 முன்னணி நடிகர்கள் (Cast) Karthi Sardar 2, PS Mithran, SJ Suryah Sardar 2
🎵 இசை (Music) யமைத்துள்ளார்
🏷️ வகை (Genre) சினிமா / பொழுதுபோக்கு (Commercial Drama)
⏱️ கால அளவு & சான்றிதழ் 2 மணி 15 நிமிடம் | U/A
✍️ விமர்சகர் (Reviewer) NewsTamil Desk
⚖️
ஒரு வரி தீர்ப்பு (Bottomline Verdict): “நல்ல பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும் திரைப்படம்.”

உளவாளி சர்தார் முடித்து வைக்க நினைத்த ஒரு பிரச்னை, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனின் கைகளுக்கு வருகிறது. அந்தப் பிரச்னையை மகன் எப்படி எதிர்கொள்கிறார்? எதிரிகளின் திட்டத்தை முறியடித்து இலக்கை அடைந்தாரா? என்ற கேள்விகளுடன் அதிரடி உளவுக் கதையாக வெளியாகியிருக்கிறது ‘சர்தார் 2’.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆசிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

கதை என்ன?

முதல் பாகத்தில் தண்ணீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வியாபாரத்தை உளவுக் கதையுடன் இணைத்திருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்த முறை பயோ ஆயுதத்தை கதையின் மையமாக எடுத்திருக்கிறார்.

1980-களில் ஜப்பானில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பயோ ஆயுதம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அந்த ஆயுதத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அது இந்தியாவில் சிக்குகிறது. இதையடுத்து இந்திய உளவு அமைப்பான ‘ரா’, அந்த ஆயுதத்தை செயலிழக்கச் செய்யும் பொறுப்பை உளவாளி சர்தார் மற்றும் அவரது குழுவிடம் ஒப்படைக்கிறது.

கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பணியை சர்தார் முடித்தாலும், எதிர்பாராத ஒரு சிக்கல் உருவாகிறது. பல ஆண்டுகள் கழித்து அந்த பயோ ஆயுதத்தைத் தேடி யோகி (எஸ்.ஜே.சூர்யா) தலைமையிலான சர்வதேச கூலிப்படை இந்தியாவுக்குள் வருகிறது.

அவர்கள் அந்த ஆயுதத்தை ஏன் தேடுகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? சர்தாரின் மகனான உளவாளி விஜய் (கார்த்தி), அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? என்பதே படத்தின் மையக்கதை.

கார்த்தி எப்படி?

படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி, இரு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நடிப்பில் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

தன்னை பெரிய அளவிலான உளவு அமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் விஜய், எதிர்பாராத விதமாக தனது தந்தையின் கடந்த காலத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய பிரச்னைக்குள் சிக்குகிறார்.

சண்டைக் காட்சிகளிலும், உளவு நடவடிக்கைகளிலும் கார்த்தியின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக, தன்னால் ஏற்பட்ட தவறை நினைத்து வருந்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

மாளவிகா மோகனன், ஆசிகா ரங்கநாத்

மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் பாதியில் இடம்பெறும் விமான சண்டைக் காட்சியில் கார்த்தியுடன் இணைந்து உளவாளியாக அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

கார்த்தி செய்த முக்கியமான தவறுக்காக அவரை வசைபாடும் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

ஆசிகா ரங்கநாத் படம் முழுவதும் வந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் அழுத்தமான எழுத்து இல்லை. அதனால் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குள் நின்று நடித்திருக்கிறார்.

வில்லனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கான முத்திரையை பதித்திருக்கிறார்.

எந்த நேரத்தில் என்ன பிரச்னையை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது பின்னணிக் கதையும் கவனம் பெறுகிறது.

ஆனால், பழிவாங்கும் நோக்கத்திற்காக அவர் முன்வைக்கும் ‘ஆண்டிபயாடிக்’ தொடர்பான காரணம் மட்டும் கதையுடன் முழுமையாக ஒட்டவில்லை.

யோகிபாபு, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், நாசர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் தங்களுக்கான பங்களிப்பை செய்துள்ளனர்.

முதல் பாதி vs இரண்டாம் பாதி

சர்தார் 2-வின் முதல் பாதி விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் செல்கிறது. உளவாளிகளின் தேடல், மர்மமான சம்பவங்கள், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் என படம் பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

குறிப்பாக விமான சண்டைக் காட்சி மற்றும் சர்தார் கதாபாத்திரம் தொடர்பான காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன.

ஆனால் இதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதியின் நீளம் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. சில காட்சிகளை குறைத்திருந்தால் திரைக்கதையின் வேகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும், ‘ரா’ போன்ற மிகப்பெரிய உளவு அமைப்பை கதைக்குள் கொண்டு வந்துவிட்டு, இறுதிக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் வழக்கமாக பார்க்கும் காவல்துறை அணுகுமுறையைப் போல அவர்களை கையாள்வது சற்று செயற்கையாகத் தெரிகிறது.

தொழில்நுட்ப ரீதியாக எப்படி?

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று சாம் சி.எஸ். பின்னணி இசை. அதிரடி மற்றும் பதற்றம் நிறைந்த காட்சிகளுக்கு அவரது இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக ‘சர்தார் 2’ மூலம் தனது 100-வது திரைப்படத்தை கடந்துள்ள சாம் சி.எஸ்., பின்னணி இசையில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு உளவு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நன்றாகக் கைகொடுக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் அதிரடிக்கு பஞ்சமில்லை.

அதே நேரத்தில், படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில் நீளும் சில காட்சிகள் படத்தின் வேகத்தை பாதிக்கின்றன.

இறுதியாக…

சர்தார் 2 முழுமையான குறைகள் இல்லாத திரைப்படம் என்று சொல்ல முடியாது. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் தக்க வைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இருப்பினும், உளவாளிகளின் மர்மமான தேடல், சர்வதேச கூலிப்படை, பயோ ஆயுதம், ஆக்‌ஷன் காட்சிகள் என கதையின் அடிப்படை அம்சங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன.

குறிப்பாக உளவுக் கதைகள், ஸ்பை த்ரில்லர்கள் மற்றும் அதிரடி திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘சர்தார் 2’ ஏமாற்றம் தராத ஒரு உளவாளிப் பயணம்.