தமிழகத்தின் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப். 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதனை அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
‘பட்டிமன்ற பிதாமகன்’ என அன்புடன் அழைக்கப்பட்ட சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழமான இலக்கிய கருத்துகளாலும் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக, பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அவர் பேசிய விதமும், கருத்துகளை எளிமையாகவும் நகைச்சுவையுடனும் எடுத்துச் சென்ற பாங்கும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியே சாலமன் பாப்பையாவின் கடைசி பட்டிமன்ற நிகழ்ச்சியாக அமைந்தது. அதன்பிறகு உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்த சாலமன் பாப்பையா, மதியம் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலமன் பாப்பையாவுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மனைவி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல்
சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று இறுதி ஊர்வலம்
சாலமன் பாப்பையாவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
தமிழுக்கும், பட்டிமன்ற மேடைக்கும் நீண்ட காலம் தனது பேச்சாற்றலால் பெருமை சேர்த்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.