பெருந்துறையில் இன்று விஜய் பிரசாரம், விஜய்க்கு கண்டன போஸ்டர்கள்
ஈரோடு: தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் வாகனப் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே இன்று காலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று மக்களிடையே விஜய் உரையாற்ற உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் முன்பு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் பின்னர் தமிழகத்தில் நடைபெறும் விஜயின் முதல் பெரிய பிரசார கூட்டமாக இந்நிகழ்ச்சி அமைகிறது.
கடும் கட்டுப்பாடுகள், 2 மணி நேர அனுமதி
விஜயின் இன்றைய பிரசாரத்துக்கு போலீசார் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். தவெகவில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், கொங்கு மண்டல அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஜய் பிரசாரம் – முக்கிய தகவல்கள்
- சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் விஜய் பயணம்
- கோவையிலிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வருகை
- காலை 11.30 மணிக்கு பெருந்துறை சரளை பொதுமேடையில் விஜய் வருகை
- தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உரை
- மதியம் 1 மணிக்கு விஜய் உரை
- கூட்டம் நடைபெறும் இடம்: 16 ஏக்கர்
- பார்க்கிங் வசதிக்காக மட்டும்: 80 ஏக்கர்
- தொண்டர்கள் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள்
- குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு
“இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள்”
நேற்று பிரசார இடத்தை நேரில் பார்வையிட்ட செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். மாவட்ட எஸ்பி. நேரில் ஆய்வு செய்து கூடுதல் பணிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விஜய் உரையாற்றும் இடத்தில் இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் விதித்த நிபந்தனைகளுக்கான அபிடவிட் தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அதிமுக மாஜி அமைச்சர்கள் இணைவார்களா?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள். இப்போது சொல்ல முடியாது” என செங்கோட்டையன் பதிலளித்தார். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் தவெகவில் இணையவில்லை என்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மட்டும் தவெகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியல் பயணம் மாறிய ராஜவர்மன், தற்போது தவெகவில் இணையத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
‘அண்ணாமலைக்கு பதில் சொல்ல நேரமில்லை’
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் பேசவில்லை என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
“அண்ணாமலைக்கு பதில் சொல்ல இப்போது நேரமில்லை. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்துவதிலேயே கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் விஜய்க்கு எதிர்ப்பு போஸ்டர்கள்
இதற்கிடையே, ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அவற்றில்,

“ஈரோடு வரைக்கும் வந்தீங்களே… கரூருக்கு போக மாட்டீங்களா?”
“கரூருக்கு போகவில்லை… ஆனால் ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க?”
என கேள்வி எழுப்பப்பட்டு, PRESENT – ABSENT என்ற ஒப்பீட்டுடன் விஜயின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.
அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெறும் இந்த பிரசார கூட்டம், தவெகவின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
