மழை பாதிப்பு: மக்களுக்கு பாதுகாப்போடு உதவி வழங்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. மழைநீர் செல்ல வேண்டிய வடிகால் வசதிகள் சரியாக அமைக்கப்படாததே தற்போது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கருத வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்போடு வழங்க வேண்டும் என தனது கழகத் தோழர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைநீர் வடிகாலமைப்பு வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் பணிகள் முழுமை பெறாததை அவர் குறிப்பிடுகிறார். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், குறைந்த அளவு மழையில்கூட இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மீதமுள்ள பருவமழைக் காலத்திற்கு முன், மக்கள் சிரமமுறாத வகையிலான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, மழைநீர் வெளியேறும் அமைப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
