தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார்.
இதற்காக முதல் அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை வழிநெடுக மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி முதல் அமைச்சர் விஜய் வந்தார்.
பின்னர் ரோடு ஷோ’வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு முதல் அமைச்சர் விஜய் வந்தார். அங்கு குவிந்திருந்த மக்கள், வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.