தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. உயா் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வர் திட்டத்தில் பயன்பெறவுள்ள நிலையில், ரூ. 401.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம்.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 25) அரசாணை வெளியிட்டுள்ளது.