டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு – 14 பேர் உயிரிழப்பு, NIA விசாரணை தீவிரம்
டெல்லி செங்கோட்டை (Red Fort) அருகே திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மெட்ரோ ஸ்டேஷன் கேட்-1 வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர், மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிப்பின் தாக்கத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இந்த டெல்லி மெட்ரோ குண்டு வெடிப்பு சம்பவம் உடனடியாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்குச் சென்ற டெல்லி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், எரிந்த கார்கள் மீது ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.

உடல்கள் அடையாளம் காணும் பணிகள் தொடக்கம்
பின்னர், சாலையில் சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நிகழ்ந்த மிகப் பெரிய பாம் பிளாஸ்ட் (Bomb Blast) இது என்பதால் பாதுகாப்பு துறைகள் மிகுந்த கவனத்தில் செயல்படுகின்றன.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாக கவனிப்பு
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தகவல் பெற்றுள்ளார். மேலும் அமித்ஷா, டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வு முகமைத் தலைவர் தபன் தேகா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு NIA விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. NIA அதிகாரிகள், சம்பவ இடம் மற்றும் அருகிலுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் போது, தீப்பற்றி எரிந்த கார் அருகே ஒரு தோட்டா (bullet shell) கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தோட்டா எந்த துப்பாக்கியில் இருந்து வந்தது எனவும், அது சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதையும் NIA ஆராய்கிறது.
போலீஸ் விளக்கம்
டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில், “செங்கோட்டை போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக நகரும் வாகனத்தில் குண்டு வெடித்தது. அந்த வாகனத்துக்குள் பயணிகள் இருந்தனர்,” என்றார்.

இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையை தொடங்கினர்.
டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் உயர் எச்சரிக்கை
செங்கோட்டை, பழைய டெல்லி பகுதியின் மிக நெரிசலான பகுதியாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதனால் இந்த டெல்லி கார் குண்டு வெடிப்பு மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு டெல்லி, NCR, உத்தரபிரதேசம், மும்பை, ஜெய்ப்பூர், உத்தரகண்ட் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை அதிகாரி விளக்கம்
துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக் கூறுகையில், “சம்பவ தகவலை அறிந்தவுடன் நாங்கள் உடனடியாகச் சென்றோம். அங்கு சிதைந்த கார்கள், உடல்கள், துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததைப் பார்த்த போது மனதை உலுக்கியது. ஏழு தீயணைப்பு யூனிட்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இரவு 7.29 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,” என்றார்.

பாதுகாப்பு வலயம் பலப்படுத்தல்
குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் அந்தப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன.
