செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10, 2026
Latest

அன்பில் மகேஸ் Bail Rejected! சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ரூ.400 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.400 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அன்பில் மகேஸ் கைது.. புழல் சிறையில் அடைப்பு!

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கான நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அன்பில் மகேஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு தொடர்பாக இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அன்பில் மகேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

அடுத்து என்ன? உயர் நீதிமன்றத்தை நாடுகிறாரா அன்பில் மகேஸ்?

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அன்பில் மகேஸ் தரப்பு நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.400 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அடுத்தகட்டமாக எவ்வாறு நகர்கிறது, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறதா என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.