நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை; ரூ.4.5 கோடி செக் மோசடி- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

‘மன்னர் வகையறா’ திரைப்படம் தொடர்பான ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிக்கும் பணிக்காக, பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. படம் வெளியான பிறகும் அந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படவில்லை என புகார் எழுந்தது.

பின்னர், கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் நோக்கில் விமல் வழங்கிய காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதுமான பணம் இல்லாததால் அது திரும்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.4.5 கோடி செக் மோசடி தொடர்பாக சென்னை 11-வது சிறப்பு சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் விமல் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பளிக்கையில், நடிகர் விமல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், பெறப்பட்ட காசோலைத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த நடிகர் விமல் தரப்பில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மேல்முறையீடு தாக்கல் செய்யும் வரை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய தேவையான அவகாசத்தை வழங்கும் வகையில், தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/