தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சினிமாவில் தனது பயணம், குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் இடையில் ஏற்பட்ட இடைவெளி குறித்து அவர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜீவன், அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்தது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.
ஹீரோ ஜீவனை உச்சத்திற்கு கொண்டு சென்ற படங்கள்
‘யுனிவர்சிட்டி’ படத்திற்குப் பிறகு சூர்யா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் ஜீவன். இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து வெளியான ‘திருட்டுப்பயலே’, ‘நான் அவன் இல்லை’ உள்ளிட்ட படங்கள் ஜீவனின் மார்க்கெட்டை உயர்த்தின. குறிப்பாக ‘நான் அவன் இல்லை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.
ஆனால் அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்த்த வெற்றி அமையாத நிலையில், ஜீவனின் சினிமா பயணத்திலும் தேக்கம் ஏற்பட்டது. ‘மச்சக்காரன்’, ‘நான் அவன் இல்லை 2’, ‘தோட்டா’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அவர் திரையுலகில் இருந்து நீண்ட காலம் விலகியிருந்தார்.
நடிகர் ஜீவன் காணாமல் போன காரணம் என்ன?
நீண்ட இடைவெளி குறித்து பேசியுள்ள ஜீவன், தாம் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று தெரிவித்துள்ளார். அவரது தந்தையும் சகோதரரும் கட்டுமானம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
சினிமாவை தனது எதிர்காலமாக ஆரம்பத்தில் திட்டமிட்டு தேர்வு செய்யவில்லை என்றும், வாய்ப்புகள் வந்தபோது அவற்றை ஏற்றுக்கொண்டு பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் நடித்த அனைத்து படங்களையும் தனக்கு பிடித்துதான் தேர்வு செய்ததாகவும், சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும், அவற்றைப் பற்றி தற்போது பேச விரும்பவில்லை என்றும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.
“குடும்பத்தினரே உதவவில்லை” – ஜீவன் வருத்தம்
தனது குடும்பத்தினரின் ஆதரவு குறித்து பேசிய ஜீவன், சினிமா பின்புலம் இல்லாததால் வீட்டில் இருந்த யாரும் தான் சினிமாவில் முன்னேறுவதற்கு தனிப்பட்ட முறையில் உதவவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் சினிமாவில் கவனம் செலுத்தியதால் குடும்பத் தொழிலை கவனிக்கவில்லை என்ற வருத்தம் குடும்பத்தினருக்கு இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தனது சினிமா பயணத்தில் சில முக்கியமான படங்கள் தனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்ததாகவும் ஜீவன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘நான் அவன் இல்லை’ திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக்
சினிமாவில் இருந்து விலகியிருந்த காலத்துக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு ‘அதிபர்’ படத்தில் நடித்தார் ஜீவன். தொடர்ந்து 2024ஆம் ஆண்டு வெளியான ‘பாம்பாட்டம்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘லவ்வர் பாய்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் அர்ஜித் சங்கர், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தில் ஜீவனுக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன?
ஒரு காலத்தில் ‘திருட்டுப்பயலே’, ‘நான் அவன் இல்லை’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்த ஹீரோ ஜீவன், மீண்டும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வருவது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை ஜீவன் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் என்பதும், ‘லவ்வர் பாய்’ திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.