வியாழக்கிழமை, நவம்பர் 19, 2026
🔴 கூகுள் செய்திகள் உடன் இணையுங்கள் NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★
Latest

வி.எஸ். பாபு காலமானார்: தவெக எம்.எல்.ஏ. மரணம்! MGM மருத்துவமனை அறிவிப்பு

📌 NewsTamil செய்திகளை உடனுக்குடன் பெற: NewsTamil இதை விருப்பமான தளமாகச் சேமிக்கவும் ★

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவம்பர் 19) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்ததாக எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தவெகவைச் சேர்ந்த வி.எஸ். பாபு. 75 வயதான இவர், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

செப்டம்பர் 22-ல் வெளியான கடைசி மருத்துவ அறிக்கை!

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்த புதிய மருத்துவ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்தன.

முதல்வர் விஜய், அமைச்சர்கள் நேரில் நலம் விசாரிப்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபுவை தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல் அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

70 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மருத்துவமனைக்கு வருகை!

இந்த நிலையில், இன்று வி.எஸ். பாபு உயிரிழந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அண்ணாநகர் துணை ஆணையர் அர்பிதா ராஜ்குப்த் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாரடைப்பால் உயிரிழப்பு – MGM மருத்துவமனை அறிக்கை!

வி.எஸ். பாபுவின் மறைவு குறித்து எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்கள், நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிறந்த மருத்துவ கவனிப்பு மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, 2026-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் காலமானார்.

இந்த இக்கட்டான சூழலில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபுவின் மறைவு தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவு, தமிழக அரசியலில் சோகமான நிகழ்வாக அமைந்துள்ளது.