Saturday, September 12, 2026
Latest

“ஓடு காலி நாயே… இந்த ஓடுகாலி நாய்களை ஓட, ஓட விரட்டுவோம்” – கீழ்த்தரமாக பேசிய சேகர்பாபு!

முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மிசா கால சம்பவங்கள் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

“மிசா போராளிகளை அவமதிக்காதே”

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர், “அவமதிக்காதே… மிசா போராளிகளை அவமதிக்காதே”, “பதில் சொல்ல துப்பில்லை”, “மிசா பற்றி பேசலாமா?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் இப்ராஹிம், சட்டப்பேரவையின் மாண்பை முதல்வர் விஜயின் பேச்சு குலைத்துவிட்டதாக விமர்சித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அவற்றுக்கு உரிய பதில் அளிக்காமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து விஜய் விமர்சனம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சேகர்பாபு காட்டமான பேச்சு

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சேகர்பாபு, முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தார். அப்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை எதிர்கொண்ட விதத்தையும், தற்போது உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை சட்டப்பேரவையில் எதிர்கொள்வதையும் ஒப்பிட்டு பேசினார்.

“திங்கள்கிழமை பதில் சொல்ல வருவேன் என்று கூறிவிட்டு, ஒரு மணி நேரம் சினிமா பாஷையில் வசனம் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பை ஏன் வழங்கவில்லை?” என சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

திமுக தற்போது “அடிபட்ட புலியாக” களத்தில் நிற்பதாகவும், உரிய நேரத்தில் அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்போம் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.

ஆ.ராசா கடும் விமர்சனம்

சென்னை சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆ.ராசா, சட்டப்பேரவையில் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் காரசாரமான விவாதங்களை நடத்துவது வழக்கமானதுதான் என்றாலும், அதற்கு அரசியல் நாகரிகத்துடன் பதிலளிப்பதே சட்டப்பேரவையின் மரபு எனக் கூறினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் அவை அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், “கேள்விகளுக்கும் பதில்களுக்கும் எந்த அநாகரிகமான அர்த்தத்தையும் கற்பிக்க முடியாது” எனக் கூறிய ஆ.ராசா, முதல்வர் விஜயின் சட்டப்பேரவை பேச்சையும் கடுமையாக விமர்சித்தார்.

எமர்ஜென்சி, சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விஜய் பேசியதையும் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் நடந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்றும், தங்களது ஆட்சியில் நடந்தால் தனிநபர் பிரச்சினை என்றும் கூறுவது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் கண்டன முழக்கங்கள்

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவினர், “முதல்வர் விஜயே வாயை அடக்கு”, “எங்கள் தலைவர் நடத்தியது ரியல் ஆட்சி; முதல்வர் விஜய் நடத்துவது ரீல் ஆட்சி” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதன் மூலம், மிசா விவகாரம் மற்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளைச் சுற்றிய அரசியல் மோதல் தமிழகத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது