Friday, September 11, 2026
LatestNEWS

அஜித் குமார் பங்கேற்கும் கார் ரேஸ்.. தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்! பிரிட்டனில் சுவாரஸ்ய சந்திப்பு

அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவல், இரு நட்சத்திரங்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் பிரிட்டன் செல்ல உள்ள நிலையில், அங்கு நடைபெறும் முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் வீரருமான அஜித் குமார் கலந்துகொள்ளும் Le Mans Cup Silverstone கார் பந்தயம், பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் Le Mans அமைப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்

தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்காகவே பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற Silverstone Motor Racing Circuit-ஐ முதல்வர் விஜய் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் – விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் குமார், நீண்ட காலமாக ரசிகர்களால் தனித்தனி ரசிகர் பட்டாளங்களுடன் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ள தகவல், இரு தரப்பு ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் இரு துருவங்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித் ஒரே சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வில் இடம்பெற உள்ள இந்த தருணம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.