ரோடு ஷோக்களில் பாதுகாப்பு பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கே – தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல்
ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பு முழுமையாக அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கும் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இதன் பேரில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன் வரைவு நெறிமுறைகளை தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பு நெறிமுறைகளின் நகலை வழங்க வேண்டும் என கோரிய நிலையில், அரசு தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை கேட்ட நீதிமன்றம், நகலை வழங்க உத்தரவிட்டதுடன் வரும் வியாழக்கிழமை இறுதி முடிவு வெளியிடப்படும் என தெரிவித்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்:
ரோடு ஷோ / பொதுக்கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள்
- ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
- 5,000 பேருக்கு மேல் திரளும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு இந்த நெறிமுறைகள் கட்டாயம் அமல்படுத்தப்படும்.
- 5,000 பேருக்கு குறைவான கூட்டங்களுக்கு விதிகள் பொருந்தாது.
- வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கும் நெறிமுறைகள் உண்டு.
- தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் தனிப்பட்ட விதிகள் மட்டுமே அமலில் இருக்கும்.
அனுமதி பெற வேண்டிய விதிமுறைகள்
- ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம் நடத்தும் தேதி, நேரம், பங்கேற்பாளர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- ரோடு ஷோ தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனையுடன் ஆட்சியர் இறுதி முடிவு எடுப்பார்.
- 50,000 பேருக்கு மேல் திரளும் கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
- சாதாரண நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்கள் முன் அனுமதி பெற வேண்டும்.
- திடீர் போராட்டங்களுக்கு ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருக்கு தீர்மான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள்
- ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவல் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
- அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்காத வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
- நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இடத்தில் திரளுவதை தவிர்க்க வேண்டும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக தமிழக அரசு புதிய நெறிமுறைகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
