KBC நிகழ்ச்சியில் இஷித் பட்டின் நடத்தை – குழந்தையின் குறையா, சமூகத்தின் பிரதிபலிப்பா? “நான் மன்னிப்பு கேட்கிறேன்” – சிறுவனின் பதிவு
கௌன் பனேகா கிரோட்பதி” (KBC) நிகழ்ச்சியில் 10 வயது சிறுவன் இஷித் பட்ட் (Ishit Bhatt) தனது நடத்தை மூலம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிதாப் பச்சன் மீது காட்டிய அவமரியாதை மற்றும் பொறுமையின்மை குறித்து பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால், இதை ஒரு குழந்தையின் குறையாக மட்டுமே பார்க்கலாமா? அல்லது சமூகமும் பெற்றோரும் உருவாக்கிய விளைவாக பார்க்க வேண்டுமா?
இஷித் பட்ட் இன்னும் பத்து வயதான சிறுவன் தான். நம்பிக்கை (Confidence) மற்றும் அகங்காரம் (Cockiness) என்பதன் வித்தியாசத்தையும், புத்திசாலித்தனம் மற்றும் மரியாதையின்மை என்பதன் எல்லையையும் அவன் அறிந்திருக்க முடியாது. இதை அவனுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. ஆனால் பல நேரங்களில், குழந்தை தவறினாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதை “பேபி” என்று ஏற்றுக்கொண்டு சரிசெய்யாமல் விடுகிறார்கள்.
இதன் விளைவாக, KBC நிகழ்ச்சியில் இஷித் அமிதாப் பச்சனிடம் பொறுமையின்றி நடந்து கொண்டார். இதற்கான பொறுப்பு அவர்மீது மட்டுமல்ல, அவரை வழிநடத்த வேண்டிய பெரியவர்கள்மீதும் உள்ளது.
சமூக ஊடக எதிர்வினை – பச்சன் இல்லையெனில் இதே அளவு விமர்சனமா?
இஷித் நடத்தை குறித்த சமூக ஊடக எதிர்வினை அதிகரித்துள்ளது. ஆனால், இதே நிகழ்வு மற்றொரு தொகுப்பாளர் மீது நடந்திருந்தால் இவ்வளவு எதிர்ப்பு எழுந்திருக்கும் என சொல்ல முடியாது.
இஷித் வளர்ந்தது, கபில் சர்மா போன்ற சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள், “ரோஸ்ட்” வீடியோக்கள், குறைந்த மரியாதையுடன் பேசும் ஹோஸ்ட்கள் போன்ற சூழலில். எனவே, அவன் “நேரடி பேச்சு” தான் இயல்பாக மாறி இருக்கலாம்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று மரியாதை, பணிவு போன்றவை அரிதாகக் காணப்படும் பண்புகள். அங்கு வளர்ந்திருக்கும் குழந்தைகளின் மனநிலையில் அதுவே பிரதிபலிக்கிறது.
பெற்றோர், சமூகம் மற்றும் பண்பாட்டின் பாதிப்பு
இஷித் மீதான கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. ஆனால், அவ்விமர்சனங்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களும் அதே அளவுக்கு மரியாதையின்மையாக இருக்கின்றன என்பதும் உண்மை.
இது ஒரு குழந்தையின் தவறல்ல, முழு சமூகத்தின் பிரதிபலிப்பு.
இன்றைய உலகம் விரைவான வெற்றி, போட்டி, முன்னேற்றம் ஆகியவற்றை மட்டுமே மதிக்கிறது. மரியாதை, நாகரிகம், பணிவு ஆகியவை “வெற்றிக்கு இடையூறு” எனப் பார்க்கப்படுகின்றன.
பெற்றோர்களும் சமூக அழுத்தத்தில் தங்கள் குழந்தைகள் “சிறந்தவர்கள்” ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மனிதநேயம் மற்றும் பண்பாட்டை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறார்கள்.
இப்போதே திருத்தம் அவசியம்!
இஷித் பட்ட் ஒரு “தவறான குழந்தை” அல்ல. அவன் ஒரு உற்சாகமான குழந்தை. அவன் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் அவன் இன்னும் அறியாதவனாக இருக்கிறான்.
அவரை குற்றவாளியாக அல்ல, வழிநடத்த வேண்டிய ஒரு குழந்தையாக தான் பார்க்க வேண்டும்.
அமிதாப் பச்சனைப் பற்றிய புரிதலும் அவனுக்கு இல்லாமலிருக்கலாம். அதனால் தான் அவன் நிகழ்ச்சியில் மிக நேரடியாக நடந்து கொண்டான்.
இஷித் பட்டின் நடத்தை ஒரு எச்சரிக்கை மணி போல. குழந்தைகளின் மரியாதை, பேச்சு முறை, பண்பாடு — இவை எல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்பே. மாற்றம் குழந்தையிடமல்ல, பெரியவர்களின் உலகத்தில்தான் தொடங்க வேண்டும்.
இஷித் பட்டின் மன்னிப்பு பதிவு:
இவ்விவகாரம் குறித்து அந்த சிறுவன் தனது சமூக ஊடகப் பதிவில் எழுதியிருப்பதாவது:
“குரோர்பதி நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பேசிய விதத்தால் பலர் காயமடைந்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.
ஒரு நிகழ்ச்சியில் எனது அணுகுமுறை தவறானது. திமிராக நடந்து கொள்வது எனது நோக்கம் அல்ல.
அமிதாப் பச்சன் சாரையும் கோன் பனேகா குரோர்பதி குழுவினரையும் நான் மதிக்கிறேன்.
எனது தவறிலிருந்து ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். இனி நான் மிகுந்த பணிவாக நடந்து கொள்வேன்.”
இந்த பதிவுக்குப் பிறகு, பலர் இஷித் மீது விமர்சனங்களைத் தளர்த்தி, ஒரு சிறுவனாக அவன் தன்னுடைய தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டிருப்பது பாராட்டத்தக்கது என கூறியுள்ளனர்.