2019-ம் ஆண்டு டாப் 5 நடிகர்கள்
2019ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பல படங்கள் வசூல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறிப்பிடத்தக்கவை. இதில் வசூல் ரீதியாகவும் மக்களை கவர்ந்த நடிகர்கள் பட்டியல் இதோ.
1. அஜித்
2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையை மாற்றியது விஸ்வாசம், வசூலிலும் பேட்ட படத்தின் சாதனையை முறியடித்தது.
ரஜினிகாந்தின் திரைப்படத்துக்கு எதிராக தனது படத்தை ரிலீஸ் செய்து தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கியதற்காகவும், தனது சமூக அக்கறையை திரையில் வலுவாக பேசியதற்காகவும் டாப் 5 நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் நடிகர் அஜித்.
2. விஜய்
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிகில். இந்த படத்தில் பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. பிகில் திரைப்படம் வசூலைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் முன்னேற்றம், ஆசிட் வீச்சுக்கு எதிரான கருத்து உள்ளிட்டவற்றை பேசியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் வினையூக்கியாக மாறியுள்ளது.
படமும் விமர்சன ரிதீயாக பெரிதாக பேசப்பட்டது. படமும் ரூ. 250 கோடிக்கு வசூலித்து இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையை விரிவுபடுத்தும் வண்ணம் வசூல் சாதனை படைத்திருக்கும் விஜய்க்கு இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம்.
3. ரஜினிகாந்த்
1990களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தத் திரைப்படம், சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் திரைப்படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமென்று சொல்லலாம்.
2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் பேட்ட படம் வெளியானது. ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் 250 கோடி வசூலைக் குவித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கான உலக சந்தையை விரிவுபடுத்திக் கொடுத்தது.
இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பிய ரஜினி, தனது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மூலம் அதிகரித்தார்.
இதன் மூலமாக 2000-க்கு பின் பிறந்தவர்கள் ரஜினிகாந்தின் புகழை அறிய வாய்ப்பாகவும் அமைந்தது இந்தப் படம். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இளம் போட்டியாக தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி உலக அரங்கில் மீண்டும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
4. தனுஷ்
பூமணி எழுதிய வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன். வெக்கையின் கதையிலிருந்து பெருமளவு படம் விலகியிருந்தது. ஆனால், அந்த நாவலில் இருந்த அதே உக்கிரம் படத்தில் வெளிப்பட்டது.
தமிழ் சினிமாவின் அற்புதமான நடிகர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் தனுஷுக்கு அசுரன் திரைப்படம் சரியான தீனியாக அமைந்திருந்தது. அசுரன் திரைப்படத்தில் வயதான சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் அக்கதாபாத்திரத்தின் தன்மையை கண் முன் நிறுத்தியிருந்தார். இதனால் பலரது பாராட்டையும் பெற்றார் தனுஷ்.
மேலும் இந்தப் படம் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல்முறையாக ரூ.100 கோடி வசூலித்த படமாகவும், தனுஷின் திரைத்துறை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்துள்ளது.
எனவே அசுரன் படத்தில் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகர் தனுஷுக்கு இந்தப் பட்டியலில் 4-ம் இடம் கிடைத்துள்ளது.
5. கார்த்தி
இந்த ஆண்டில் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்றால், நிச்சயம் கைதி படத்தைச் சுட்டிக்காட்டலாம்.
2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் தேவ், கைதி, தம்பி ஆகிய 3 படங்கள் வெளியாகின. இதில் பிகில் படத்துடன் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படமும் குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க இரவிலேயே நகரும் கைதி படம், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே லாபம் ஈட்டிக் கொடுத்தது. வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியாகவும் வெற்றி நாயகனாக தடம் பதித்திருக்கும் கார்த்திக்கு 2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள் பட்டியலில் 5-ம் இடம் கிடைத்துள்ளது.
Comments are closed.